கன்னியாகுமரி கடலில் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

சனி, 20 மே 2017 (06:26 IST)
இந்தியாவின் தென்கோடி எல்லையான கன்னிகுமரி மிகச்சிறந்த சுற்றுலா பகுதிகளில் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவர்ந்த முக்கிய இடம் விவேகானந்த பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.



 


இந்த நிலையில் விவேகானந்தா பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒருசில நேரங்களில் கடல் உள்வாங்கினாலோ, அல்லது அலைகள் ஆர்ப்பரித்தாலோ படகு சேவை நிறுத்தப்படுகிறது. இந்த நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா ஆகியோர் கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது பாலம் அமைக்க வேண்டும் என்ற அவசியத்தை புரிந்து கொண்டனர். இந்நிலையில் மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் ஒருசில முக்கிய இடங்களில் பாலம் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதன்படி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.15 கோடி செலவில் விரைவில் பாலம் அமைக்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்