கண நேர தூக்கத்தால் விமானத்தை விட்ட இந்தியர்! – துபாயில் தவிப்பு!

ஞாயிறு, 5 ஜூலை 2020 (12:14 IST)
துபாயிலிருந்து இந்தியா வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில் முன்பதிவு செய்து முதல் நாளே விமான நிலையம் வந்தும் பயணி ஒருவர் விமானத்தை தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் விமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

கேரளாவின் முஸ்லிம் கலாச்சார மையம் துபாயில் சிக்கியுள்ள கேரளாவை சேர்ந்தவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்தது. இந்த விமானத்தில் கேரளா திரும்புவதற்காக அபுதாஒஇயில் ஸ்டோர் கீப்பராக பணிபுரியும் ஒருவர் 22,500 ரூபாய் செலவு செய்து முன்பதிவு செய்துள்ளார்.

விமானத்தை தவற விட்டுவிட கூடாது என முதல் நாள் முதலே தூங்காமல் அனைத்தையும் ஏற்பாடு செய்த அவர், விடியற்காலையிலேயே விமான நிலையம் வந்து கொரோனா பரிசோதனை, பாஸ்போர்ட் சோதனை என அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்திற்காக சென்று காத்திருந்துள்ளார். விமானம் வந்து சேர சில நிமிடங்களே இருந்த நிலையில் முந்தைய நாள் தூங்காமல் இருந்த அசதியில் கண்களை மூடியுள்ளார்.

விழித்து பார்த்தபோது அவர் செல்ல வேண்டிய விமானம் ஏற்கனவே புறப்பட்டு சென்றுவிட்டது. விசா காலமும் முடிந்து விட்டதால் விமான நிலையத்திற்கு வெளியேயும் செல்ல முடியாமல் அவர் தவித்துள்ளார். அடுத்ததாக வரும் சிறப்பு விமானத்தில் அவரை அழைத்து வர முஸ்லிம் கலாச்சார மையம் ஏற்பாடு செய்துள்ளது, அதுவரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருக்க வேண்டிய சூழல்.

கண நேர தூக்கத்தால் விமானத்தை தவறவிட்ட இந்தியரின் கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்