சொல்ல சொல்ல கேட்காமல் தேர்வு நடத்திய கர்நாடகா! – மாணவர்களுக்கு கொரோனா!

ஞாயிறு, 5 ஜூலை 2020 (10:48 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திய நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு வீரியமடைய தொடங்கியதால் பல மாநிலங்களில் பள்ளி பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகம், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வை ரத்து செய்து முழு தேர்ச்சி வழங்குவதாக அறிவித்தன. மத்திய அரசும் சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஜூன் 25ம் தேதி முதல் பல்வேறு பாதுகாப்புகளுடன் 10ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு மாஸ்க் அளித்தல், சானிட்டைசர் வழங்குதல் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளையும் செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ஹாசன் மாவட்டம் அரகால்குட் பகுதியில் பள்ளி ஒன்றில் பொதுத்தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. மாணவருக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் அவரை தேர்வு எழுத அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இக்கட்டான சூழலில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தியதற்காக கர்நாடக அரசை பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தேர்வு எழுதிய சக மாணவர்கள் மற்றும் பனியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்