மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி தங்கிய ஹோட்டலுக்கு 80 லட்ச ரூபாய் பாக்கியை வட்டியுடன் சேர்த்து ஜூன் 1-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புலிகள் காப்பத்தின் 50வது ஆண்டு பொன் விழா கடந்த 2023 ஏப்ரல் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூருக்குச் சென்றார். அப்போது அங்குள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் அன்று இரவு அவர் தங்கி ஓய்வெடுத்தார்.
அதன்பின்னர் மறுநாள் காலை அங்கிருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமனஹள்ளிக்குச் சென்றார். பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வனப்பகுதியில் 20 கி.மீ தூரம் ஜீப் சவாரி செய்து வனவிலங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதற்காக வந்து தங்கிய நட்சத்திர ஓட்டலில் வாடகைக் கட்டணம் 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. வாடகை பாக்கியை இதுவரை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்ற பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரேடிசன் ப்ளூ பிளாசா ஓட்டலின் பொதுமேலாளர், வனத்துறை அதிகாரி பசவராஜுக்கு 2024 மே 21-ம் தேதியன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் "எங்கள் ஓட்டல் சேவைகளைப் பயன்படுத்திய 12 மாதங்களுக்குப் பிறகும் பில்கள் இன்று வரை செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியாக கடிதம் மூலம் வலியுறுத்தியும் இந்த பில்கள் செலுத்தப்படாமல் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீத தாமதமாக செலுத்தும் வட்டியாக 12.09 லட்ச ரூபாயைச் சேர்த்து தர வேண்டும் என்றும் வருகிற 2024 ஜூன் 1-ம் தேதிக்குள் இந்த நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.