விமான சேவைகள் தொடங்கியதுமே ரத்து! – ஒரே நாளில் 630 விமானங்கள் ரத்து!

செவ்வாய், 26 மே 2020 (08:27 IST)
நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவையை தொடங்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். எனினும் இன்று முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு நிபந்தனைகள் சிலவற்றை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழித்தடங்களில் செயல்படும் விமானங்களில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறாக குறைவான பயணிகள் உள்ள விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு புக்கிங் செய்தவர்கள் அந்த பணமும் உடனடியாக கிடைக்க வழியில்லை என்று புலம்பி வருகின்றனர்.

நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானம் மீண்டும் சென்னை வர பயணிகள் அதிகம் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த இரண்டு இண்டிகோ விமானங்களும் குறைவான பயணிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

பிற நகரங்களிலிருந்து சென்னைக்கு 25க்கும் அதிகமான விமான சேவைகளை இயக்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்ட நிலையில் மத்திய அரசு 25க்கும் குறைவான சேவைகளையே இயக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மொத்தமாக 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்