கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல் மருத்துவரான ஒருவர், தனது மாமியாரை கொலை செய்து, உடலை 19 துண்டுகளாக வெட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரட்டகெரே என்ற பகுதியில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி, ஒரு பாலீதீன் பையில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் இடைவெளியில், பல பைகளில் உடல் உறுப்புகளின் பாகங்கள் கண்டறியப்பட்டன. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவி என தெரியவந்தது. அவரது கணவர் முதலில் இதை மறுத்தாலும், பின்னர் காவல்துறையினரால் உறுதி செய்யப்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு காரில் வந்த மூவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக லட்சுமி தேவியின் மருமகன் ராமச்சந்திரா, தனது நண்பருடன் சேர்ந்து இந்த கொடூர செயலை செய்துள்ளார். 47 வயதான ராமச்சந்திரா, தனது மனைவியையும் லட்சுமி தேவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுவாரோ என்ற சந்தேகத்தில், அவரை திட்டமிட்டு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.