நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல் ஒடிசாவில் 4 மக்களவைக்கும், 28 சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.