ஆக்சிஜன் இல்லாமல் பறிபோகும் உயிர்கள்... டெல்லியின் கொடூர நிலை!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:02 IST)
டெல்லி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் உச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முதலில் தரும் சிகிச்சையான ஆக்சிஜன் தருவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் ஆக்சிஜன் சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
இதனிடையே, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 60 நோயாளிகள் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் ஆக்ஸிஜன் இல்லாமல் ஒருவர் உயிரிழப்பதை கூட ஏற்க முடியாது என்றும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்