கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின் கேள்வித்தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழை இருந்ததால் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து மதுரை ஐகோர்ட், தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் தரவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இந்த நிலையில் நீட் தேர்வின் போது, மொழிபெயர்ப்பு சரியாக இல்லையென கூறி தொடரப்பட்ட வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 2018 நீட் தேர்வு வினாதாளில் மொழி பெயர்ப்பில் இத்தனை தவறுகள் உள்ள நிலையில் எப்படி இந்த தேர்வை அனுமத்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை என சுப்ரீம் கோர்ட் சிபிஎஸ்சி அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆங்கில அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தேர்வின் போது பொது அறிவையும் பயன்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.