உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன்' திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்த ராதாரவி, இந்த வழக்கு ஆரம்பமான நாளில் இருந்தே குற்றவாளி யார் என்று தெரிந்துவிட்டது. ஆனால் சாட்சி? எத்தனை நாள் காத்திருந்தேன் ஒரு சாட்சி கூட வரவில்லை' என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அதே வசனத்தை இன்று 2ஜி வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும் ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன். ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும் ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல முடியாது.
2ஜி ஒதுக்கீட்டை தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை”
இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.