1975ம் ஆண்டில் அமலான எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
1975ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அமல்படுத்திய எமெர்ஜென்சியால் நாடே ஸ்தம்பித்து போனது. பல மாநில கட்சி பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1975 முதல் 1977 வரை 2 ஆண்டு காலம் தொடர்ந்த எமெர்ஜென்சியால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எமெர்ஜென்சி காலத்தில் பலர் மிசா சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு மாநில அரசுகள் பல உதவித்தொகை திட்டங்களை வழங்கி வருகின்றன. தற்போது அசாமிலும் மிசா கைதிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 301 பேருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மிசாவில் சிறைச் சென்ற நபர் உயிரோடு இல்லாத பட்சத்தில் அவரது மனைவிக்கோ, திருமணமாகாத மகளுக்கோ இந்த உதவித்தொகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் மிசா கைதிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை விட அசாமில்தான் அதிக தொகை வழங்கப்படுவதாக அசாம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.