தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன் முதன் முறையாக பெண் வேடமிட்டு நடித்திருக்கும் ரெமோ திரைப்படம் இன்று வெளியானது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் மீது வர வர எதிர்பார்ப்புகள் அதிகரித்தே வருகிறது. அதே போல அவரது மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.
படத்திற்கு கொடுக்கப்பட்ட பிரெமோஷன் மற்றும் சிவா, கீர்த்தி சுரேஷ் ஜோடி மீதான ஈர்ப்பு, நர்ஸ் வேடத்தில் வரும் கதாபாத்திரத்தால் இந்த படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.
ரெமோ படத்தின் டிரெய்லரே படத்தின் கதையை சொல்லிவிடும். நடிப்பின் மீது அதிக ஆசை கொண்ட சிவா சூப்பர் ஸ்டார் போல ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் இயக்குனர் கே.எஸ் ரவிகுமாரை சந்திக்கிறார். ஆனால் தான் தற்போது எடுக்க போகும் படம் பெண் வேடமிடும் ஹீரோவை மையமாக வைத்தது என கூறுகிறார்.
இயக்குனரை கவர அவர் சொன்ன பெண் வேடமிட்டு வரும் போது கீர்த்தி சுரேஷை பார்த்து அவர் மீது காதல் வயப்படுகிறார். கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அவரை காதலில் விழ வைத்து ஒன்று சேர வேண்டும் என தனது பாதையை மாற்றுகிறார் சிவா.
அதற்காக கிர்த்தி சுரேஷ் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் நர்ஸாக வேலைக்கு சேர்கிறார். சிவா பெண் தான் என நம்பி அவரிடம் நெருங்கி பழகும் கீர்த்தி அவர் மீது காதலில் விழுகிறாரா?, இருவரும் ஒன்று சேர்கிறார்களா, சிவாவின் சினிமா கனவு என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் அடுத்து லெவலுக்கு சென்றிருக்கிறார் எனலாம். கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் ஜோடி பொருத்தம் மிகவும் அழகாக இருக்கிறது. இருவருக்கும் இருக்கும் அந்த கெமிஸ்ட்ரி படம் முழுவதும் பயணிக்கிறது. பெண் வேடத்திலும், ஆண் வேடத்திலும் சிவகார்த்திகேயன் அழகில் மிரட்டியிருக்கிறார்.
நர்ஸ் வேடத்தில் இருக்கும் போது வரும் சண்டை காட்சிகள் சிறப்பாக உள்ளது. தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு படத்தில் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சதீஷின் கவுண்டர்கள் சிரிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயனின் கடந்த படங்களை போல இல்லாமல், காமெடி, நடிப்பு என கலந்து கட்டி நடித்திருக்கிறார்.
நடிப்பதற்கு நல்ல படமாக கீர்த்திக்கு ரெமோ அமைந்துள்ளது. கிடைத்த வாய்ப்பை கீர்த்தி நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் எனலாம். படத்தில் லாஜிக் சில இடங்களில் இடிக்கிறது. சில இடங்களில் திரைக்கதை சொதப்பினாலும் சிவகார்த்திகேயன் அந்த குறையை போக்குகிறார்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியை திரையில் இவ்வளவு அழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தான் இந்த படத்தின் நிஜ ஹீரோ எனலாம். படத்தின் ஒவ்வொரு பிரேமும் செதுக்கப்பட்டிருக்கிறது. சிறுதும் சொதப்பல் இல்லாமல் தன்னிடம் உள்ள மொத்த திறமையையும் இதில் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பாடல்களில் இசையில் சொதப்பினாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் அனிருத். இவை எல்லாவற்றையும் சிறப்பாக அமைத்து, ரசிக்கும்படியான, போரடிக்காத, குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு அருமையான திரைப்படத்தை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.