அதே டெய்லர்.. அதே வாடகை! டைனோசர் பழசு! ஆளுங்க மட்டும் புதுசு! - ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் விமர்சனம்!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (10:07 IST)

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ஜுராசிக் திரைப்பட வரிசையில் தற்போது வெளியாகியுள்ள படம்தான் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்.

 

முந்தைய பாகங்களில் டைனோசர்களை வைத்து ஒரு கேளிக்கை பூங்கா அமைக்கும் பணி தோல்வியில் முடிய அவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த பாகத்தில் அதிலிருந்து கதை தொடங்குகிறது. ஆய்வக விபத்து ஒன்றில் இருந்து தப்பிக்கும் டைனோசர்களால் உலகின் அனைத்து விதமான தட்பவெப்ப நிலைகளையும் தாக்குப்பிடித்து வாழ முடியவில்லை.

 

அதனால் அவை பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள தீவு ஒன்றில் தஞ்சமடைகின்றன. அதன் பிறகு உலகம் முழுவதும் ஒரு புதிய வைரஸ் தொற்று உருவாகி பலர் மடிகிறார்கள். இதற்கான தடுப்பு மருந்தை டைனோசர்களின் ரத்த மாதிரிகளை எடுத்தால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலைமை. அதனால் நீர், நிலம், ஆகாயம் என மூன்றிலும் வாழும் மூன்று பெரிய டைனோசர்களிடம் இந்த மாதிரிகளை சேகரித்து வர ஒரு குழு அந்த தீவுக்கு செல்கிறது.

 

அப்படி செல்லும் குழு அங்கு வேட்டையாடும் வெறியுடன் திரியும் டைனோசர்களிடம் இருந்து தப்பி ரத்த மாதிரிகளை எடுத்தார்களா? என்பதுதான் கதை.  

 

இதற்கு முந்தைய பாகங்களை போலவே நிறைய டைனோசர்கள், அவைகளுக்கு நடுவே சிக்கிக் கொள்ளும் விஞ்ஞானிகள் குழு, அந்த குழுவுக்குள்ளேயே ஒரு கருப்பு ஆடு என வழக்கமான டெம்ப்ளேட்டிலேயே பயணிக்கிற கதையில், 3டியில் தோன்றும் டைனோசர்களே குழந்தைகளை ஈர்க்கின்றன. சமீபத்திய ஜுராசிக் ப்ரான்சைஸில் ஒவ்வொரு பாக இறுதியிலும் புதுவிதமான டைனோசர் ஒன்று தோன்றுவதும், அதை டி ரெக்ஸ் சுளுக்கு எடுப்பதுமான காட்சிகள் உள்ள நிலையில் இதிலும் ஒரு ஏலியன் டைனோசர் வந்து மிரட்டுகிறது. மொத்தத்தில் ஜுராசிக் வேர்ல்டு குழந்தைகளுக்கு விருந்து, பெரியவர்களுக்கு பழைய மருந்து.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்