இந்திய பங்குச்சந்தை நேற்று மந்தமான வர்த்தகத்தில் இருந்த நிலையில், மொத்தமே 100 புள்ளிகளுக்கு இடையேதான் வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையிலும் இன்றும் மிகவும் மந்தமான வர்த்தகம்தான் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 28 புள்ளிகள் மட்டுமே சரிந்து, 83,420 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 22 புள்ளிகள் மட்டுமே சரிந்து, 25,440 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று போலவே இன்றும் பெரிய அளவில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும், எனவே புதிதாக வர்த்தகம் செய்ய வருபவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், மாருதி சுசுகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன் பார்மா, டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.