இப்படியும் சில மனிதர்கள்
வெள்ளி, 21 மே 2010 (13:36 IST)
உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
காதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும், நேர்மறையாக மட்டுமே எல்லாமும், எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில், திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
போது, பெண்ணை, ஆண் மிரட்டுவதும், ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும், தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்களாக இருப்பினும், காதலர்களாக இருப்பினும், தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை, யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவே, நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது, காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம், ஒரு ஆணும், பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம், காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..