கன்னியாகுமரிக்கு கடும் போட்டி.! குறி வைக்கும் எம்எல்ஏக்கள்.! அதிர்ச்சியில் விஜய் வசந்த்.!!

Senthil Velan

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:51 IST)
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி, கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் ஆகியோர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், சிட்டிங் எம்.பியான விஜய் வசந்த் தனது தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியின் வேட்பாளராக கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்த குமாரை நிறுத்தியது தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி. 
 
மறுமுனையில் பா.ஜ.கவில் பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் ஜெய்தீன், அ.ம.மு.க இலக்ஷ்மன், ம.நீ.ம எபினேசர் ஆகியோர் தேர்தலை சந்தித்தனர். முடிவில் சுமார் 6.27 லட்சம் வாக்குகள் பெற்று வசந்தகுமார் வெற்றி பெற்றார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2020-ல் வசந்தகுமார் மரணமடைந்தார்.
 
இதையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சம்பந்தப்பட்ட தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். 
 
இந்நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியை கேட்டிருக்கிறார், விஜய் வசந்த். மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களும் சீட் பெறுவதற்கு முயற்சித்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்.பியான விஜய் வசந்த் முயற்சித்து வருகிறார். மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின்  ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் சிட்டிங் எம்.பி ஒருவர் மூலமாகவும், விஜயதரணி தனக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கு மூலமாகவும் முயற்சி செய்து வருகிறார்கள். 

ALSO READ: ரன் மழை பொழிந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்..! வலுவான நிலையில் இந்திய அணி..!!
 
இந்த ரேஸில் முதலிடத்தில் இருப்பது விஜயதரணி தான். ஒருவேளை தனக்கு சீட் கிடைத்து வெற்றி பெற்று விட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறார். இதனால் விஜய் வசந்த் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்