மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொன்னேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து பட்டியலிட்டு அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உதயநிதி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டி முடிக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.