அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்த பாமக அதனுடனேயேக் கூட்டணி வைத்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏழு மக்களவை தொகுதிகளை பெற்ற பாமகவின் ராமதாஸ் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ராமதாஸ் மீதும் பாமக மீதும் விசிக, திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளன.
இதையடுத்து நேற்று சிதம்பரம் தொகுதியின் பிரச்சாரத்தில் பேசிய ராமதாஸ் ‘தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை வைத்து அதை திருமா வளவனைத் திறக்க வைத்தேன். சமுதாயத்திற்கு பயன்படுவார் என்றெண்ணி, மதுரையில் இருந்த அவரை இங்கே கொண்டு வந்து அறிமுகம் செய்தேன். அவரை இன்று ஊடகங்கள் இன்று ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணம் நான்தான். அது என்னுடைய தவறுதான்’ எனப் பேசினார்.
ராமதாஸின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள திருமாவளவன் ‘ சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் வீட்டில் நடைபெற்ற விருந்துக்குப் பின்னர் திமுக மற்றும் கருணாநிதியால் தான் நாடே குட்டிச்சுவராகி விட்டது எனவும், அனைவரையும் குடிகாரர்களாக்கி விட்டனர். நீ மட்டும்தான் கலைஞருடன் ஒட்டிக் கொண்டிருக்கிறாய். நீ வெளியே வந்துவிட்டால் திமுக ஒழிந்துவிடும். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை ஒழித்துவிட வேண்டும் என்றும் சொன்னார்’ எனக் கூறியுள்ளார்.