பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நதிநிர் இணைப்புப் பற்றி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு ரஜினிக்கு ஆதரவாக டிவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று ரஜினியின் அடுத்தப்படமான தர்பார் படத்தின் போஸ்டர் வெளியானது. இன்று தொடங்கவுள்ள படப்பிடிப்புக்காக ரஜினி நேற்று தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ‘தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் நதிகளை இணைக்க வேண்டும். அப்படி நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை ஒழியும்: விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். நதிகள் இணைப்பிற்காக நான் காலம் முழுவதும் குரல் கொடுத்து வருகிறேன்.’ எனத் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டி இருப்பதால் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஊடகங்களும் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என செய்திகளை வெளியிட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது கருத்தினை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தனது டிவிட்டில் ‘ரஜினி சாரின் ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஒரு குடிமகனாக நதிநீர் இணைப்புப் பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை இல்லையா ? ஏன் இதை அரசியலாக்க வேண்டும் ?’ என ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.