தமிழகக் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனார் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றக் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக மாறிக்கொண்டிருந்த த.மா.க. மூப்பனாரின் இறப்பிற்குப் பின் மெல்ல தேய ஆரம்பித்தது. அதன் பின் அவரது மகன் ஜிகே வாசன் அக்கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். இடையில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.க-ஐ ஆரம்பித்தார்.
ஆனால் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தமாக என்றொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் வாசன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் த.மா.க.வைக் கழட்டி விட்டது திமுக. இதனால் அதிமுகக் கூட்டணியில் இணைந்தார் ஜிகே வாசன். அவருக்கு தஞ்சாவூர் தொகுதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த தொகுதியில் நிற்க தங்களின் சின்னமான சைக்கிள் சின்னத்தைக் கேட்டிருந்தார் வாசன். ஆனால் குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது நிற்கவேண்டும் என்ற நிபந்தனையோடு. மேலும் இந்த ஒருத் தேர்தலுக்குதான் சைக்கிள் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிரந்தர சின்னமாக தர முடியாது எனவும் கூறியது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார் வாசன்.
இதையடுத்து இன்று நடந்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ‘ தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க முடியாது’ எனக் கூறி தீர்ப்பளித்துள்ளனர். இதையடுத்து வாசன் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிட முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.