இனிமேல் ஃபேஸ்புக்கில் அதை பார்க்க முடியாதா? – ஃபேஸ்புக் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:59 IST)
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஃபேஸ்புக்கிலேயே நாளொன்றுக்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் நண்பர்களோடு உரையாடுவதை விடவும், போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்வது அதற்கு அதில லைக்குகள் வாங்குவதில் அதிக விருப்பம் காட்டுகிறார்கள்.

இது உளவியல்ரீதியாக இளைஞர்களை பாதிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தனது நண்பன் ஒருவன் பதிவிட்ட புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் கிடைத்து தனது புகைப்படத்திற்கு கிடைக்கவில்லை என்றால் தன்னை தானே தாழ்த்தி நினைத்து கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறதாம்.

போதாக்குறைக்கு ஃபேஸ்புக் பேஜ் வசதி இளைஞர்களிடையே சண்டை, சச்சரவுகளையும் கொண்டு வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள ஒருவரோ அல்லது சிலரோ இணைந்து தங்களுக்கு பிடித்த நடிகர். விளையாட்டு வீரர் அல்லது காமிக்ஸ் நிறுவனங்கள் பெயரில் ரசிகர் பக்கத்தை தொடங்கி கொள்ளலாம். இதனால் ஒரு ஃபேஸ்புக் பக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பையும், லைக்குகளையும் பார்த்து மேலும் சிலர் அதே போன்ற வேறு பக்கத்தை தொடங்குகிறார்கள். இரண்டு பக்கத்திற்குமான சண்டை என்பது அவர்களது பேஜ் லைக்குகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.

நிறைய லைக்ஸ் வாங்குபவர் பெரிய ஆள் போலவும், லைக்ஸ் கிடைக்காதவர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக லைக்ஸ் வழங்கும் முறையையே இல்லாமல் செய்து விட முடியாது. ஒரு பதிவுக்கு அதை பார்ப்பவரின் ரியாக்சன் என்ன என்பதை லைக்ஸ் வைத்து மட்டுமே கணிக்க முடியும்.

எனவே ஃபேஸ்புக் தனது மற்றொரு அப்ளிகேசனான இன்ஸ்டாகிராமில் நடைமுறைப்படுத்திய திட்டத்தை ஃபேஸ்புக்கிலும் செயல்படுத்த உள்ளது. கனடா உள்ளிட்ட 7 நாடுகளில் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் எவ்வளவு என்பதை காட்டாத வண்ணம் மாற்றியமைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு புகைப்படத்தை லைக் செய்தால் அது அந்த புகைப்படத்தை பகிர்ந்தவருக்கு மட்டுமே தெரியும். நீங்கள் அதை லைக் செய்திருப்பதை வேறு யாராலும் பார்க்க முடியாது. அதுபோல போட்டோவுக்கு கீழே லைக் ஆப்சன் இருக்கும். ஆனால் எவ்வளவு பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்று காட்டாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாவில் உள்ள பிரபலங்களில் யார் அதிகம் லைக்ஸ் வாங்குகிறார் என்று ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சில நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே நடைமுறையை தற்போது ஃபேஸ்புக்கிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர். இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பதிவிடுபவர் தவிர அவரது பதிவுகளை லைக்ஸ் செய்தவர்கள் யார் என்பதை யாராலும் பார்க்க முடியாது.

இதை நடைமுறைப்படுத்துவது குறித்த சாதக பாதகங்களை ஃபேஸ்புக் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்