அறிமுகமானது புதிய ஆப்பிள் ஐ ஃபோன் 7

வியாழன், 8 செப்டம்பர் 2016 (05:30 IST)
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ ஃபோன் 7-ல், வழக்கமாக மற்ற செல்பேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்ஃபோன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது.
 

 
ஹெட்ஃபோன் சாக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், ஒயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் நிறுவனம் கருதுகிறது.
 
ஒயர் இல்லாத, ஏர்பாட்ஸ் என்ற கூறப்படும் காதில் பொருத்திக் கேட்கும் புதிய சாதனத்தையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
 
ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒலித்திறன் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஒயருடன் கூடிய ஹெட்ஃபோன்தான் சிறந்தது என்பது நிபுணர்களின் வாதம்.
 
ஆனால், 159 அமெரிக்க டாலர் அல்லது 119 பவுண்டு மதிப்புடைய தனது ஏர்பாட் கருவிகளை பயன்படுத்துவதில் பல சாதக அம்சங்கள் உள்ளதாக ஆப்பிள் வாதிடுகிறது. வழக்கமான ப்ளூடூத் ஹெட்செட்களைவிட, ஒயர் இல்லாத சாதனங்களை விரைவில் இணைக்க முடியும் என அது கூறுகிறது. ஏர்பாட் சாதனத்தை காதுகளில் இருந்து எடுத்துவிட்டால், இசை தானாக நின்றுவிடும் என்றும் தெரிவிக்கிறது.
 

 
ஏர்பாட் சார்ஜ் செய்தபிறகு, ஐந்து மணி நேரத்துக்கு நீடிக்கும் என்கிறது ஆப்பிள்.
 
அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம், சான் ஃபிரான்சிஸ்கோவில் புதிய ஐஃபோனை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
 
புதிய ஐ ஃபோனில், ஹோம் பட்டனில் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதிர்வு (வைப்ரேஷன்) அடிப்படையிலான பதில்களைத் தரும்.
 
புதிய ஃபோன், சுமார் 30 நிமிடங்கள் வரை, 3.2 அடி ஆழமுள்ள தண்ணீரில் போடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என அந்நிறுவனம் கூறுகிறது.
 
பெரிய ஐஃபோன் 7 பிளஸ், பின்புறம், ஒய்ட் ஏங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ ஆகிய இரண்டு லென்ஸ்களுடன் கூடிய கேமராவை வழங்குகிறது. இதன் மூலம், படத்தின் தரம் குறையாமல் குளோஸப் காட்சி எடுக்கவும், முன்பிருந்ததை விட 10 எக்ஸ் ஜூம் பொருத்தவும் வழியேற்படுத்துகிறது. கேமரா செயலி மூலம் புகைப்படங்களை கிராப் செய்து கொள்ள முடியும்.
 

 
இதுபோன்ற வசதி, எல்.ஜியின் ஜி5 செல்பேசியில் ஏற்கெனவே உள்ளது. புதிய ஐஃபோனில் இரு பக்கமும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ஒலியளவு ஐஃபோன் 6-ஐ விட இருமடங்காக இருக்கும் என்கிறது ஆப்பிள்.
 
ஆப்பிள் ஸ்மார்ட் கைக் கடிகார வரிசையில் புதிய கைக்கடிகாரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
ஆப்பிள் வாட்ச் 2 கைக்கடிகாரத்தை 164 அடி ஆழம் வரை தண்ணீருக்குள் கொண்டு செல்லலாம். அதாவது நீச்சலின்போதும் இதைப் பயன்படுத்தலாம். ஜிபிஎஸ் வசதியுடன் புதிய செயலிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்