அமெரிக்கா செல்ல, விசாவுக்காகக் காத்திருக்கும் சத்யா என்ற இளைஞர், தனக்கு வாழ்வில் எல்லாமே கிடைத்த போதும் ஏதோ குறைவது போல் உணர்கிறார். தன் வாழ்வின் அர்த்தம் என்ன? பிறவிப் பயன் என்ன? எனத் தேடுகிறார். அதன் தொடர்ச்சியாக, தான் மாதந்தோறும் நன்கொடை அளிக்கும் அநாதை இல்லத்துக்குச் சென்று பார்க்கிறார். அங்கே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைச் சந்திக்கிறார். அங்கே அவருக்கு நேரும் அனுபவங்கள், அவருக்குள் எத்தகைய மன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன? அவர் தன் பிறவிப் பயனைக் கண்டுணர்ந்தாரா? என்பதே மீதிக் கதை.
இதைப் பிரச்சாரம் போன்று இல்லாமல், இயல்பான கதையாக எடுத்துள்ளதன் மூலம் இயக்குநர் ஹரிஷ் வெற்றி பெற்றுள்ளார். எழுதி, இயக்கியதோடு படத் தொகுப்பிலும் தம் ஆற்றலை ஹரிஷ் வெளிப்படுத்தியுள்ளார். மணி மணியான நடிகர்கள், கச்சிதமாக நடித்துள்ளார்கள். கெவினின் ஒளிப்பதிவும் ஹரி ஜி ராஜசேகரின் இசையும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.