டொரேட்டோவை கொல்ல துரத்தும் ஜான்சினா: வாயை பிளக்க வைக்கும் ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர்!
சனி, 1 பிப்ரவரி 2020 (15:27 IST)
உலகமெங்கும் ரசிகர்களை கொண்ட ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் 9ம் பாகத்திற்கான புதிய ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்ற திரைப்படங்களில் ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைப்பட வரிசை முக்கியமான ஒன்று. முதல் மூன்று பாகம் வரை ஹாலிவுட்டில் மட்டுமே வெற்றிப்பெற்றிருந்த இந்த படவரிசை நான்காவது பாகம் முதல் உலகமெங்கும் ரசிகர்களை ஈர்க்க தொடங்கியது.
இதுவரை ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்” கதை வரிசையில் மொத்தம் 8 பாகங்கள் வெளிவந்துள்ளன. இதுதவிர ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற தனிப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. அதிவேக ரேஸ் கார்களை கொண்டு வின் டீசல் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் உலகளவில் பிரசித்தம். கடந்த எட்டாம் பாகம் வெளியானபோது தமிழில் மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு இருக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதி டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திரையரங்க வாயில்களில் காத்திருந்த செய்தியெல்லாம் பயங்கர வைரலாக பரவியது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒன்பதாம் பாகமான தி ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர் எப்படியிருக்கிறது? இந்த திரைப்பட வரிசையின் முக்கிய கதாநாயகனான பால் வாக்கர் ஒரு விபத்தில் இறந்துவிட்டபடியால் இந்த படத்தில் அவர் இல்லை. இந்த படத்தில் வழக்கமாக வரும் பிரபல ரெஸ்லிங் வீரர் மற்றும் நடிகரான ராக் என்னும் ட்வெய்ன் ஜான்சன் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால் அவர் இல்லாத குறையை போக்குமளவுக்கு படத்தில் ரெஸ்லிங் வீரர் ஜான் சினா வில்லனாக தோன்றியுள்ளார்.
வழக்கமான ஆக்ஷன் அதிரடி காட்சிகளுடன், காதலும், குடும்ப பாசமும் பிணைந்த பக்கா ஹாலிவுட் கமர்சியலாக உருவாகியுள்ளது தி ஃபாஸ்ட் சாகா. கதைப்படி டோமினிக் டொரேட்டோ (வின் டீசல்) மற்றும் ஜேக்கப் (ஜான் சினா) இருவரும் சகோதர்கள். சிறுவயதில் பிரிந்துவிட்ட ஜேக்கபை ஒரு கேங் தேர்ந்தெடுத்து டொரேட்டோவை கொல்ல அனுப்புகின்றனர். அதை தொடர்ந்து டொரேட்டோவின் ஆக்ஷன் அதிரடி நட்பு பட்டாளம் களம் இறங்க சூடுபிடிக்கிறது ஆட்டம். மேலும் ஆறாம் பாகத்தில் இறந்துவிட்டதாக காட்டப்பட்ட ஹேன்லூ இதில் திரும்ப வருகிறான்.
முந்தைய பாகங்களில் ஏரோபிளேனை கயிறு கட்டி இழுப்பது, பீரங்கியை உருட்டி விளையாடுவது, நீர்மூழ்கி கப்பலை கலங்கடிப்பது என விஞ்ஞானத்தோடு விபரீதமாக மோதிய டொரேட்டோ குழு இந்த பாகத்தில் ராக்கெட் எஞ்சினை காரில் கட்டிக்கொண்டு மலையிலிருந்து மலைக்கு பறந்து சாகசம் செய்கின்றனர். தீவிரமான ஹாலிவுட் பிரியர்களுக்கு எதிர் வரும் மே 22ல் வெளியாகும் இந்த படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பது உறுதி.