ரிஷிபஞ்சமி வழிபாடு என்பது பெண்களினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கும். அனைவரும் தன தானியம் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருந்து குழந்தைப் பேறும் பெற்றிட ரிஷி பஞ்சமி விரதம் செய்ய வேண்டும் என வடநாட்டுப் பண்டிதர்கள் கூறுவார்கள். அது மட்டும் அல்ல ஒருவரது வீட்டில் பெண்களினால் ஏற்பட்ட சாபத்தை விலக்கவும் அது அவசியம் என்றும் கூறுவர்.
புரட்டாசி மாதம் சுக்ல பஷ்ச திதியில் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விடியற் காலை எழுந்து சூரியன் உதிக்கும் முன்பே நதியிலோ குளத்திலோ கிணற்று நீரிலோ குளித்தப் பின் பட்டாடை உடுத்திக் கொண்டு விரதத்தை துவக்க வேண்டும்.
சந்தனத்தால் ஆன பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்க்கு மாலை அணிவித்து கலசம் வைக்க வேண்டும். அதன் பின் நாம் நமக்குத் தேவையான பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு பூஜையை துவக்க வேண்டும். அதன் ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும். அந்த விரதம் இருக்கும்போது நாள் முழுவதும் விரதம் இருந்து ஒருவேளை மட்டுமே சிறிதளவு உணவை உண்ண வேண்டும். அன்று சிறிதேனும் பிரசாதங்களை செய்து அதை வீட்டிற்கு அன்று வருகை தரும் உறவினர் அல்லது நண்பர்களுக்கு தர வேண்டும்.
அப்படி யாருமே வீட்டிற்கு வரவில்லை என்றால் குறைந்தபட்ஷம் வீட்டு வாயிலில் நின்று கொண்டு அங்கு வரும் பிச்சைக்காரர்களுக்காவது போட வேண்டும். அதை பூஜா பிரசாத தானம் என்பார்கள். அதன் பின் கலசத்தின் முன் நின்று கொண்டு மனதில் காஷ்யபா, அத்ரி, பாரத்வாஜ முனிவர்கள், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, மற்றும் வஷிஷ்ட போன்ற முனிவர்களிடம் தமது குடும்பத்தில் பெண்களினால் ஏற்பட்டுள்ள சாபங்களை விலக்குமாறு வேண்டிக் கொள்ள சாபங்கள் விலகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை அவரவர் தேவைக்கு ஏற்ப மூன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் கடை பிடிக்கலாம்.