சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும்போது கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்!

வியாழன், 16 நவம்பர் 2023 (10:37 IST)
சபரிமலையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஹரஹரசுதன் ஆனந்த சித்தன் சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி தூக்கி பயணம் செல்லும் பக்தர்கள் மறவாமல் இந்த அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.



சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்பவர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவது சிறப்பானது. அதற்கு பின் மாலை அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து அணிதல் நலம்

மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.

பக்தர்கள் தங்களுடைய தாய், தந்தை, குருசாமி யார் ஒருவர் மூலமும் மாலையை அணிந்து கொள்ளலாம். குருசாமி இல்லாதோர் கோவிலில் சுவாமி சன்னதியில் மாலையை வைத்து பூஜித்து அர்ச்சகர் மூலமாக மாலையை அணியலாம்.

மாலை அணிவதற்கு பக்தர்கள் ருத்திராட்ச மணி மாலை, துளசி மாலைகளை பயன்படுத்துவது சிறந்தது.

ஐயப்ப பக்தர்கள் செருப்பு அணிதல் கூடாது. கருப்பு, நீலம், பச்சை அல்லது காவி நிறத்தில் வேட்டிகள் அணிதல் வேண்டும்.

மாலை அணியும் பக்தர்கள் முக்கியமாக கோப தாபங்களையும், விரோத மனப்போக்கையும் தவிர்ப்பது அவசியம். அண்டை அயலாருடன் விரோதம் கூடாது.

மாலையை எக்காரணம் கொண்டு கழற்றுதல் கூடாது. விரத நாட்களில் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் மாலையை கழற்றி வைத்து விட்டு மது அருந்திவிட்டு குளித்து விட்டு மீண்டும் மாலை அணிந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவும், மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகும் நீராடி கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ ஐயப்பனை மனதார வேண்டி சரணங்கள் கூறி வணங்குதல் வேண்டும்.

பிரம்மச்சரிய விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்தல் வேண்டும். மாமிசம் கொள்ளக் கூடாது.

சபரிமலை யாத்திரை செல்லும் முன் பக்தர்கள் வீடுகளில் பூஜைகள் நடத்தி எளியோருக்கு அன்னதானம் செய்தல் சிறப்பை தரும்.

சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் முழு பக்தியுடன் அனைத்து அனுஷ்டானங்களையும் முறையாக கடைப்பிடித்து மனமுருக ஐயப்பனை வேண்டினால் பரிபூரண அருளை தருவார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்