பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் கோவில் விழா – பக்தர்களின் பெரும் திரள்!

Mahendran

புதன், 5 மார்ச் 2025 (19:23 IST)
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் அமைந்துள்ள செல்லியாண்டியம்மன் கோவில், காவல் தெய்வமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பொங்கல் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். 
 
கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், திருவிழா நடந்திருக்கவில்லை. இந்த ஆண்டோ, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்களின் ஆன்மிக பக்தியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 
விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லியாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடைபெற்றது. பவானி, ஈரோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாங்களே பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் ஆகியவற்றால் மூலவருக்கு அபிஷேகம் செய்து தரிசனம் பெற்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, எஞ்சிய 15 மணி நேரத்துக்கும் மேலாக பூஜை செய்து ஆன்மிக உற்சாகத்தில் கலந்து கொண்டனர்.
 
இன்று  காலை சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா கோலாகலமாக தொடங்கியது. புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து, மேளதாளங்களுடன் சக்தி அழைத்து வரப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை பணம் போன்றவற்றை சூறை வீசினர். பக்தர்கள் போட்டியிட்டு அவற்றை எடுத்துச் சென்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்