முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் கிருத்திகை நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேய கடவுளுக்கு உகந்த நாட்கள்.
கங்கையாகிய ஆறு தாங்கிய, ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே.
சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையளுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் 'கார்த்திகேயன்" எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.
மேலும், அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது.