கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி என்பதை விட ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.
கோவில்களில் கோபுரங்கள் அமைப்பது பற்றி சிற்ப நூல்கள் கூறுகின்றன. முதலாவது கோபுரம் துவார சோபை எனவும், இரண்டாவது கோபுரம் துவாரசாலை எனவும் மூன்றாவது கோபுரம் துவாரப் பிரசாதம் எனவும், நான்காவது கோபுரம் துவார ஹர்மியம் எனவும், ஐந்தாவது கோபுரம் மஹாமர்யதை எனவும் பெயர்பெறும்.
இவ்வைந்தாவது கோபுரமே மஹா கோபுரம் எனவும், ராஜ கோபுரம் எனவும் சிறப்புப் பெயர் பெறுகிறது. பொதுவாக மஹா கோபுரம் எனப்படும் ராஜ கோபுரமே கோவில்களில் காணப்படும். புரங்களின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல பெயர்களால் அவை அழைக்கப்படுகின்றன. வல்லீ, கவாஷம், ஸ்வஸ்திகம், நாகபந்தம் சர்வதோபேதம், நந்தியாவர்த்தம், புஸ்பதந்தம் முதலியன சிலவாகும். கோபுரம் என்பதற்கு இறைவனை நோக்கி ஆன்மாக்கள் செல்லும் வழி எனப் பொருள் கூறுவார். கருவறையின் மேல் உள்ள விமானம் சிரசாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும் கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடல் ஒன்றின் மூலம் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகிறார்.
இதனை திருமூலர்:
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்க
கள்ளப் பலனைந்தும் காளாமணி விளக்கே” என்று கூறுகிறார்.