மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே குழுவாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக சிறப்பிக்கப்படுகின்றன.
தை அமாவாசைக்கு மறுநாள், ஆண்டுதோறும், இந்த 11 பெருமாள் கோவில்களில் இருந்து கருடசேவை உற்சவம் மிகுந்த பக்திப் பரவசத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கருடசேவை நேற்று காலை தொடங்கி, பக்தர்களின் பெரும் திரளுடன் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருடசேவை மிகுந்த விமரிசையாக அமைந்தது. நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன் பின் ஒன்றாக, சிறப்பு அலங்காரத்தில், ஊரின் முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
இரவு 12 மணியளவில், தங்க கருட வாகனத்தில், வெண்பட்டு குடைகளுடன் அலங்கரிக்கப்பட்ட நாராயணப் பெருமாள் கோவில் வாயிலில் 11 பெருமாள்களும், ஆழ்வாரும் எழுந்தருளினர். அப்போது, ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடப்பட்டு, மகா தீபாராதனை மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.