உலகம் முழுவதுமே மக்கள் காலை விடிந்தாலும் சரி, மாலை சூரியன் மறைந்தாலும் சரி, உடனடியாக தேடி செல்வது டீ, காபி கடைகளைதான். பலருக்கும் காலையிலேயே ஒரு ஸ்ட்ராங்கான டீயோ, காபியோ குடித்தால்தான் நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். காலை, மாலை என்று இரண்டு வேளை டீ, காபி அருந்துவது கூட ஓகே.
ஆனால் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு உயிர்மூச்சே டீ, காபிதான் என்பது போல ஒரு நாளைக்கு பல தடவை டீ, காபி அருந்துவார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல, உற்சாகத்தை தரும் காபி, டீ அளவுக்கு மீறினால் பல உடல்நல பிரச்சினைகளையும் கொண்டு வரக்கூடியது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டீ, காபி அதிகம் குடிப்பதால் ஏற்படும் புதிய வகை பிரச்சினை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 கப் அல்லது 300 மி.லி டீ, காபி குடிப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. உடலுக்கு உற்சாகம் தருவதுடன், ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தையும் தருகின்றன.
ஆனால் அதை தாண்டும்போது அளவுக்கு ஏற்ற விபரீதத்தையும் அவை வரவழைக்கின்றன. ஒரு நாளைக்கு 400 மி.லி வரை காபி, டீ தொடர்ந்து அருந்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கமின்மை, பதட்டம் உள்ளிட்ட தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்.
டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கின்றன. ஒரு நாளை 5 கப் அல்லது 500 மி.லி என்றளவில் டீ, காபியை உட்கொள்ளத் தொடங்கும்போது ரத்த சோகை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
வெறும் வயிற்றில் அதிகமாக டீ, காபி குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தி நீண்ட கால வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. உணவுக்கு பிறகு டீ, காபி குடிப்பது சிறந்தது, அதுவும் அளவுக்கு அதிகமாக குடிக்காமல் இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
Edit by Prasanth.K