மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் 33 வது நினைவுதினம் !

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (23:35 IST)
இந்தியாவில் எந்தவொரு நடிகருக்கும் இல்லாத ஒரு வசீகரம் முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு இருப்பதை இந்த உலகமே ஆச்சர்யத்துடன் பார்ப்பதில் எந்த வியப்புமில்லை. அவர் தன் வாழ்வில் சந்தித்ததை மாணவர்களும், இளைஞர்களும்,ஏழைகளும், மக்களும் சந்திக்ககூடாது என நினைத்து, அதையே தனது படங்களிலும் நல்ல கருத்துகளையே அவ்வூடகத்தின்வழி தன் நடிப்பை வெளிப்படுத்தினார். அரசியலில் அவரது முகத்தைக்கொண்டே வாக்குகள் அள்ளியதாக பேரறிஞர் அண்ணா கூறியுள்ளது எத்தனை உண்மை! எம்.ஜி.ஆர் அவர்கள் அமரராகி இன்றைக்கு 33 ஆண்டுகள் ஆனபோதிலும் அவரது பெயருக்கும் புகழுக்கும் உண்டாயிருக்கிற மதிப்பை யாராலும் ஒப்புக்கொள்ளாமலிருக்க முடியும்? எதிர்க்கட்சிகள் கூட இதை அங்கீகரித்துள்ளதை நம்மால் மறுக்கமுடியாது.
 
காமராஜரின் மதியவுணவுத்திட்டத்தை சத்துணவுத் திட்டமாக்கி ஏழை மாணவர்களுக்கு வயிறார சோறிட்டதுடன் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் சாப்பிட்டிருக்கிறார்களா என்பதை ஒவ்வொருவரையும்பார்க்கும்போதும் அவர் கேட்டிருப்பதாக மதிர்ப்பிற்குரிய ஏவிஎம்.சரவணனன் ஒருமுறை கூறியுள்ளார்.அதேபோல் வள்ளலார் இராமலிங்கனாரின் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பைப்போல் அவரது இல்லத்திலும் எந்நேரமும் வருவோருக்கு வயிராக சோறுகொடுத்துப் பசியாற்ற அடுப்பெரிந்துகொண்டிருக்கும் எனத் தகவகளுண்டு. அவர் தனது சிறியவயதில் தந்தையை இழந்து வீட்டுச்சூழ்நிலையைச் சமாளித்து, வறுமையைவென்றுடுக்கவேண்டியே அவர் நாடகத்தில் நடித்து, தனது முப்பதாவது வயதில்(1947) கதாநாயகனாகிறார். அதிலிருந்து அவரது சினிமாகிராப் ஏறுமுகம்தான். அவரை வாத்தியார் என்று அன்புடன் அழைத்து அவருக்காக உயிரையும்கொடுக்கத் துணிந்த எண்ணற்ற ரசிகர்களின் அன்பினால் அவர் திமுகவைவிட்டு 1972 ஆம் ஆண்டு நீக்கப்பட்டபோதிலும்கூட அதே சூட்டுடன் தன் அரசியல்குருவான அண்ணாவின் பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் நாயாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தபோது, அதில் மாயத்தேவரை களமிறக்கினார் அவர். அப்போது, கட்சிதொடங்கு முதன்முதலாகத் தேர்தல்களம்கண்ட அதிமுகவுக்கு சுயேட்சைச்சின்னம் ஒதுக்கப்பட்டது. அபேட்சகர் மாயத்தேவர் 16 சின்னங்களிலிருந்து 7 வதாக இருந்த இரட்டைஇலைச் சின்னத்தைத்தேர்வு செய்தார். அதேபோல் இரண்டாம் உலகபோரில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டண்ட் சர்ச்சில்போல் எம்ஜிஆர்  தனது இரண்டு விரல்களை மக்களிடம்காட்டி தனது சினிமா பிம்பத்தாலும், ஏற்கனவே மக்களிடம் தனக்குள்ள நன்மதிப்பாலும் முதலில்கண்ட தேர்தலிலேயே ஆளும்கட்சிக்கு எதிராக அரசியல்நட்சத்திரமாக ஜொலித்தார்.பின்னர் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மக்களின் நாயகமாக கொலுவீற்றிருர்ந்து இதயக்கனியானார்.
 
அவர் சினிமாவிலிருந்தாலும் மக்களுக்கு நல்லகருத்துகளைக் கூறவேண்டுமென அவர் ஒரு சினிமா விழாவிலேயே ஒரு அரைமணிநேரம் பேசிய பேச்சு அனைவரும் கவனத்தில்கொள்ளத்தக்கது. அவருடைய அரசியல் பயணம் அண்ணாவால் ஆழங்கால்பட்டு தனது ஆழ்ந்தறிந்த அறிவாலும் அனுபவத்தாலும் வாழ்க்கைப்பாடத்தாலும் கூர்தீட்டப்பட்டது. இன்றைய அதிமுகவுக்கு அன்று அவர் இட்டதே அசைக்கமுடியாத அஸ்திவாரம் என்றால் மிகையல்ல. எத்தனையோ விமர்சனங்கள் கவிஞர் கண்ணதாசனைபோல் அவர் மீது கூறியவர்கள் இருந்தாலும் அந்த மக்கள் கவிஞருக்குத் தனது படத்தில் பாடலெழுத வாய்ப்புக்கொடுத்தும், அவரையே அரசவைக் கவிஞராக்கவேண்டி அதேசமகாலத்தில் சினிமா ராஜ்ஜியத்தில் கண்ணதாசனுக்கு நிகராக கடைவிரித்திருந்த வாலியிடமே இதுகுறித்துக்கூறிய பண்பாளர்தான் எம்.ஜி.ஆர்.
இன்றும் அவர் வெகுஜன மக்களின் இதயங்களின் இதயதெய்வமாகவும் கதாநாயகனாகவும்  வாத்தியாராகவும் காஷ்மீர் குல்லாவைத் தலைக்கு அணிந்து, பட்டுவேஷ்டி சட்டையில், கறுப்புக்கண்ணாடியுடன் சகிதமாகச் சிரித்தமுகத்துடன் வாழ்த்துகொண்டே இருக்கிறார்…. இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஆளப்போவதாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் தனது தங்கக்க்குணம் பொன்னானசெயல்களின் மூலம் எங்கிருந்தோ அரசியல்பாடம் எடுத்துக்கொண்டே இருக்கிறார் பாரத் ரத்னா.டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்.
 
சினோஜ்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்