திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்து எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்று வரும் வரம் பெற்றார்.
இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முக கவசம் படிக்கவேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது. சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்ப்புப்பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும் அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுகுழந்தைகள் உருவாயின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
பிள்ளைகள் ஆறுப்பேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவன் எனப்பொருள். சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா செளபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். இவை காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.