சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகை!

Webdunia
பொங்கல் விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,  மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப்  பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

 
போகிப் பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும்  விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான  எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
 
பொங்கல் கொண்டாட காரணம்:-
 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு  ஆயர்கள் மரியாதை செய்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான்.  கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர்  காத்தருளினார். 
 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம்  ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள்  வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை (போகி பண்டிகை) ஆயர்கள்  கொண்டாடினர். 
 
தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா  (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,  மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்