வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைக்க சீனாவுக்கு நெருக்கடி
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (18:24 IST)
உலகின் மிகப்பெரிய கரியமிலவாயு வெளியேற்றியான சீனாவுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க சீனா ஒப்புக் கொள்ளலாம் என்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.நா. வானிலை மாநாடுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் டர்பனில் நடைபெறும் மாநாட்டில் உலக நாடுகளின் பேச்சு வார்த்தைகள் முடிவுகளைப் பொறுத்து சீனா இதற்குச் சம்மதிக்கும் என்று தெரிகிறது.
பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளை வற்புறுத்தக்கூடாது என்று சீனாவும் இந்தியாவும் கொடிபிடித்து வந்தன. ஆனால் ஏழை நாடுகள் சீனாவையும், இந்தியாவையும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி வந்தன.
தற்போது சீனா வெளியேற்றத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டால் இந்தியா மீதும் நெருக்கடி அதிகரிக்கும் என்று வானிலை மாநாட்டு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியின் ஒரு அலகில் 40 முதல் 455 வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் சீனா இதற்கு ஒப்புக் கோண்டால் மாற்று எரிசக்திக்கு அந்த நாடு ஒரு பில்லியன் யுவான் செலவழிக்கவேண்டி வரும், அதாவது 157 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படும்.
சீனாவின் எரிசக்தி தற்போது நிலக்கரியால் பூர்த்தி செய்யப்படுகிறது. கரியமில வாயு வெளியேற்றம் நிலக்கரியால் ஏற்படுவது மிக அதிகம்.
உலகிலேயே நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் நாடாக சீனா இருந்து வருகிறது.