கான்குன் மாநாடு முடிவும்: ஜெய்ராம் ரமேஷின் கூற்றும்

சனி, 11 டிசம்பர் 2010 (13:44 IST)
மெக்சிகோவில் நேற்றுடன் முடிவடைந்த ஐ.ா.வானிலை மாநாட்டில் வானிலை உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதனை இந்தியா ஏற்றுக் கொள்வதாயும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து வரும் மாற்றுத் தரப்புச் செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகின்றன.

"கோபன்ஹேகன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் வரைவு செய்யப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் வானிலை உடன்படிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எந்த விதத்திலும் வெப்ப வாயு வெளியேற்ற கட்டுப்பாடு அளவுகளுக்கு நன்மை பயக்காது என்பதைப் பார்க்கும் போது இது சுற்றுச்சூழலுக்கு சீரழிவுதான்" என்று விஞ்ஞான மற்றும் சுற்றுச் சூழல் மையத்தின் சந்திரா பூஷன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் "கான்குன் உடன்படிக்கை நம்மிடையே உள்ளது... ஒப்பந்த வரைவு குறித்து மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் வரைவு இவர் மகிழ்ச்சிக்கு எப்படி காரணமானது என்று புரியவில்லை.

கியோட்டோ ஒப்பந்தங்களில் வரையப்பட்டுள்ள வாக்குறுதிகள் 2012ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால் வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அதாவது வெப்பவாயு வெளியேற்றத்தை அதன் 1990ஆம் ஆண்டு நிலவரத்திலிருந்து 5% குறைப்பதில் முன்னேற்றம் மந்தகதியில் இருந்து வருகிறது.. ஆனால் இதுவரை எந்த நாடும் ஒரு அடி கூட இதில் எடுத்துவைக்கவில்லை என்பதே உண்மையாயிருக்க நம் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மகிழ்ச்சியடைந்திருப்பது எதனால் என்று தெரியவில்லை.

ஒரு சிலர் இந்த ஒப்பந்தம் வேலைக்கு ஆகாது என்றும், கியோட்டோவை மறக்கடிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகையில் மற்ற சில பிரிவினரோ இதுதான் இப்போதைக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய குறைந்தபட்ச புள்ளிகளைக் கொண்டடுள்ளது என்று கருதுகின்றனர்.

அதாவது ஜெய்ராம் ரமேஷின் மகிழ்ச்சிக்குக் காரணம் ஒருவேளை, பணக்கார நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றக் கட்டுப்பாடு விகிதம் வளரும் நாடுகளுக்கு இல்லை என்பதாக இருக்கலாம். யார் வெளியேற்றினால் என்ன, பாதிக்கப்படுவது நாமல்லாத ஏழைகளும் ஏழை நாடுகளும்தானே? இதில் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது என்பதை ஜெய்ராம் ரமேஷ்தான் விளக்கவேண்டும்.

மகிழ்ச்சியளிக்ககூடியதாக இருக்கும்போது பொலீவியா ஏன் கையெழுத்திட மறுத்தது?

ஆனால் கார்டியன் இதழ் செய்திகளின் படி பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை வரைவில் 2020ஆம் ஆண்டுக்குள் வெப்பவாயு வெளியேற்றத்தை 20% முதல் 40% வரை குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இது 'ஒப்புக்கொள்ளப்பட்டால்' கான்குன் மாநாட்டில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே பொருள் என்று தெரிவித்துள்ளது.

இந்த வெப்பவாயு வெளியேற்றக் குறைப்பு விகிதங்களை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் 4% குறைப்போம், அதற்கு அடுத்த ஆண்டு மேலும் 4% குறைப்போம் பிறகு 2020ஆம் ஆண்டு வரை இந்த அளவு அதிகரித்துக்கொண்டே சென்றால்தான் வெப்பவாயுவைக் குறைக்க முடியும்.

2020ஆம் ஆண்டுக்குள் 1990ஆம் ஆண்டு நிலையைக் காட்டிலும் 5% குறைப்போம் என்பது சரியாக வராது. ஏனெனில் வெப்பவாயு வெளியேற்ற அதிகரிப்பினால் பனிஉருகல் அதிகரிக்கும் பனி உருகல் அதிகரித்தால் அதனடியில் புதைந்துள்ள கரியமில, மீத்தேன் வாயுக்கள் விண்வெளிக்குச் சென்று மேலும் வெப்பமடைதலை அதிகரித்து மீண்டும் எல்லாம் நடைபெறும் வன்சுழற்சி நிலைக்குள் சிக்கவைத்து விடும்.

எனவே வானிலைமாற்ற விவகாரத்தில் எந்த வித நீண்டகாலத் திட்டங்களும் எடுபடாது. குறுகியகாலத் திட்டங்கள் அதனை அனைத்து நாடுகளும் ஒழுங்காக நிறைவேற்றுகிறதா என்று சரிபார்க்க நடுநிலை அமைப்புகள், சரிசெய்யாத நாடுகளுக்கு அபராதம் அல்லது பொருளாதாரத் தடை என்று சட்டரீதியான பிணைப்பு இருக்கவேண்டும்.

கியோட்டோ ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட உறுதிகளுக்கு ரஷ்யாவும் ஜப்பானும் ஒப்புக் கொள்ளவில்லை. கனடாவும் கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

அதேபோல் பசுமை நிதி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது. அதாவது பேச்சு வார்த்தைகளின் அனைத்துப் புள்ளிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் பசுமை நிதி பற்றி குறிப்பிடத்தகுந்த முடிவுக்கு வர முடியும் என்று அமெரிக்கா தட்டிக் கழித்துள்ளது.

மேலும் வனப் பகுதிகள் பராமரிப்பு, பசுமைத் தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்த வரைவுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தரவும் மறுத்துள்ளது. அதாவது சீனா போன்ற வளரும் நாடுகள் வெப்பவாயு வெளியேற்ற விகிதங்களின் அளவு சரிபார்த்து சரிசெய்யப்படும் வரை ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்கா பிடிவாதமாகக் கூறியுள்ளது.

இதனால் வானிலை மாநாடுகள் என்பது ஒரு முடிவற்ற பேச்சுச் சந்தைக் கடையாக மாறியுள்ளது என்று அங்கு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

கியோட்டோ ஒப்பந்தம் "வானிலை மாற்றத்தைத் தடுக்க சரியான, திறமையான வழி இல்லை." என்று ஜப்பான் கூறியுள்ளது.

ஆனால் பல வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் தங்கள் வெப்பவாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க கியோட்டோதான் சரியான ஆயுதம் என்று கருதுகின்றன. இதனால் கியோட்டோ உடன்படிக்கையில் அடுத்தக் கட்ட வெப்பவாயு வெளியேற்றக் குறைப்பு உடன்படிக்கைகளை செயல் படுத்த வேண்டும் என்று பிரேசில் தெரிவித்துள்ளது.

இத்தனையாண்டுகளாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும், சுற்றுசூழல் நிபுணர்களும் எழுதி வந்தவைகளும், நிரூபித்த விஷயங்கள் எதையும் கான்குன் மாநாடு பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது.

மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வானிலை மாற்ற ஐ.நா. மாநாடுகளிலும் பணக்கார நாடுகள் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு பசுமைத் தொழில்நுட்பத்தை எப்படி விற்பது என்பதற்கான நடைமுறையை விவாதிப்பதாகவே முடிந்து வருகிறது. எனவே இந்த மாநாடுகள் ஒருக்காலும் பூமியின் விடிவு குறித்துச் சிந்திக்காது. இது மீண்டும் ஒரு புதிய வர்த்தகத்தை நோக்கியே செல்லும்.

இதனால் மீண்டும் ஒரு தோல்விதான் ஏற்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளும் வளரும் நாடுகளும் சேர்ந்து செய்யும் சுற்றுசூழல் நாசங்களுக்கு கடுமையாக பாதிக்கப்படும் ஏழை நாடுகளை மையத்திற்குக் கொண்டு வந்து அந்தநாடுகள்தான் வானிலை மாற்ற ஒப்பந்தத்திற்கான வரைவை உருவாக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டும். அதுவரை வெற்றுப் பேச்சுக்கள்தான் மாநாடுகளாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இதிலும் ஒரு ஆபத்து உள்ளது. விக்கிலீக்ஸ் கேபிளில் தெரிவிக்கப்பட்டது போல், அமெரிக்கா இந்த ஏழை நாடுகளுக்கு ஒப்பந்த வரைவை உருவாக்க வாய்ப்பளிக்குமாறு நடித்துவிட்டு மற்றொரு புறம் அந்த நாட்டின் பிரதிநிதிகளுக்கு லஞ்சங்களை வாரி வழங்கி தங்களுக்குச் சாதகமாக திருப்பிவிடும்.

விக்கிலீக்ஸ் வெளியீடுகளுக்குப் பிறகு எந்த வித அசிங்கங்கங்களுக்கும், பயங்கரத்திற்கும் துணிந்த நாடு அமெரிக்கா என்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்