வானிலை மாற்றம்: அமெரிக்காவின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது- ஜெய்ராம் ரமேஷ்
செவ்வாய், 7 டிசம்பர் 2010 (17:52 IST)
வானிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்வினை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு கரியமிலவாயு வெளியேற்ற அளவுகளிலிருந்து 2020ஆம் ஆண்டுக்குள் 17% குறைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது கவலை அளிப்பதாக இருக்கிறது என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
ஆனால் கியோட்டோ ஒப்பந்தங்களின் படி அமெரிக்காவின் இந்த முடிவு பின் தங்கியுள்ளது. அதாவது 17 சதவீத வெப்பவாயு வெளியேற்றக் குறைப்பு 1990ஆம் ஆண்டு இருந்ததிலிருந்து 4%தான் குறைப்புதான் உண்மையில் நடைபெறும்.
மேலும் உள்நாட்டு சட்டதீர்திருத்தங்கள் இல்லாதது, மற்றும் செயல்முறையில் தொய்வு ஆகியவை காரணமாக 17% குறைப்பும் 14%ஆகவே வாய்ப்பு உள்ளது என்கிறார் ஜெய்ராம் ரமேஷ். 14% குறைப்பு என்பது 1990ஆம் ஆண்டு நிலவரத்திலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையாகும்.
"2050ஆம் ஆண்டு வெப்பவாயு வெளியேற்றக் குறைப்பு நிலவரங்களுக்கு அமெரிக்கா சாதகமாக இருந்தாலும் அப்போது நம்மில் யாரும் இருக்கப்போவதில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டு நிர்பந்தத்திற்கு அமெரிக்கா தயாரா என்றால் இல்லை இது கவலையளிக்ககூடியது." என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
அதே போல் புவிவெப்பமடைதலின் வானிலை மாற்ற விளைவுகளால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு அளிக்கப்படும் தோகையான 1.7பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தில் பலமான நாடு அமெரிக்கா என்பதற்கு நியாயம் செய்வதாயில்லை. என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதே போல் வெப்பவாயு வெளியேற்றக் குறைப்பு குறித்த எந்த ஒரு சர்வதேச ஒப்பந்தமும் அமெரிக்கா இல்லாமல் வியர்த்தமாகவே போய் முடியும் என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.