பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

திங்கள், 3 டிசம்பர் 2012 (12:21 IST)
FILE
பொருளாதார வளர்ச்சி-இயற்கைச் சுரண்டல் மானுட வசதி, முதலாளிய பேராசை ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் காலங்காலமாக தத்துவவாதிகளும் எச்சரிக்கை விடுத்தும் மனித இனம் திருந்தியபாடில்லை.

2012ஆம் ஆண்டு புவிவெப்பமடைதலுக்குக் காரணமாகும் கரியமிலவாயு வெளியேற்றம் 2.6% அதிகரித்து 35.6 பில்லியன் டன்கள் கரியமிலம் அண்ட வெளிக்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு வெளியேற்ற அளவைவிட 58% அதிகரித்துள்ளது.

எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாக இந்த புவிவெப்பமடைதலும், வானிலை மாற்ற விளைவுகளும் காரணமாக அமையும் என்று பிபிசி செய்திகள் தெரிவித்துள்ளது.

புவி வெப்பமடைதலால் வெப்ப நிலை அளவு மொத்தமாக 2 டிகிரி செல்சியஸ் மட்டுமே ஏறுமாறு பார்த்துக் கொள்ளப்படும் என்று பணக்கார நாடுகள் உறுதி தெரிவித்ததோடு சரி. ஆனால் செயலில் எதுவும் நடைபெறவில்லை. மாறாக தற்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பும் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதிலிருந்து உலகம் தப்பிக்கவியலாது குறிப்பாக கடலோரங்களில் இருக்கும் தீவு நாடுகள், ஏழை நாடுகள் ஆகியவை என்று விஞ்ஞானிகள் மீண்டும் அபாயச் சங்கு ஊதியுள்ளனர்.

தோஹாவில் தற்போது மாநாடு நடைபெற்று வருகிறது. ஆனால் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைக்கு எந்த அரசும் செவிசாய்ப்பதாயில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரியமிலவாயு வெளியேற்றம் 1980களில் 1.9%, 1990களில் 1.0% ஆனால் 2000த்திற்கு பிறகு சராசரி வெளியேற்றம் 3.1%ஆக அதிகரித்துள்ளது.

புவிவெப்பமடைதல் அதன் விளைவான வானிலை மாற்றம் ஆகியவற்றில் கரியமில வாயு வெளியேற்றம் 85% தாக்கம் செலுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்