கேமரூனில் 200 யானைகளைக் கொன்ற போக்கிரிகள்!

சனி, 18 பிப்ரவரி 2012 (16:06 IST)
ஜனவரி மாதத்தின் பாதி முதல் கேமரூன் நாட்டில் சுமார் 200 யானைகள் அதன் தந்தத்திற்காக கொல்லப்பட்டுள்ளன.

விலங்குகள் நல சர்வதேச நிதியம், இது குறித்து கூறுகையில், சூடானைச் சேர்ந்த விஷமிகள் யானைத் தந்தத்திற்காக இந்த படுபாதகச் செயலைச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

வடக்குக் கேமரூனில் உள்ள பௌபா எஞிதா தேசியப் பூங்காவில் உள்ள 200 யானைகள் ஜனவரி முதல் கொல்லப்பட்டுள்ளன.

கேமரூனின் எல்லை சாத் என்ற பகுதிக்கு அருகில் உள்ளது, இதன் எல்லை சூடானின் எல்லையருகில் உள்ளது. ஆய்தம் தாங்கிய போராளிகள் யானைகளைக் கொல்வதாகத் தெரிகிறது.

இதுவரை 100 யானைகளின் தந்தம் பிடுங்கப்பட்ட சடலங்கள் கிடைத்துள்ளது. சூடான் தீவிரவாதிகள் பணத்திற்காக கேமரூன் யானைகளைக் கொல்வது வழக்கம்தான் என்றாலும் இந்த பெரிய எண்ணிக்கையிலான படுகொலைகள் அங்கு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து இந்தத் தந்தங்கள் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் கடத்தப்படுகின்றன. இதில் கிடைக்கும் மிகப்பெரிய தொகை கொண்டுதான் சூடான் தீவிரவாதிகள் ஆயுதங்களை வாங்குவதாக விலங்கு நல நிதியம் தெரிவித்துள்ளது.

கேமரூனில் உள்ள மொத்த யானைகள் எவ்வளவு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஆயிரம் முதல் ஐயாயிரம் யானைகள் வரை அங்கு இன்னும் இருக்கலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்கள் கேமரூன் அரசை இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்