கழிவுநீர் நதியாக மாறிவரும் கங்கை ஆறு! கவனிக்குமா அரசு?

திங்கள், 14 மே 2012 (17:57 IST)
FILE
இந்தியாவின் புனித நதி என்று வழங்கப்படும் கங்கை நதி மாசடைந்து மோசமாகி வருகிறது என்றும் இதனை அரசு உடனடியாக கவனிக்காவிட்டால், தொடர்ந்து மத்திய அரசு அலட்சிய போக்கை கடைபிடித்தால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று இயக்கத்தினர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"சாகும் நதி"-யைக் காப்பற்ற நடவடிக்கை எடுக்க அரசிற்கு மே 20ஆம் தேதி வரை கெடு விதிக்கபப்ட்டுள்ளது.

"எவ்வளவோ போராட்டங்கள் செய்தோம் பயனில்லை, அமைச்சர்கள் உறுதி மொழி கொடுத்தனர். ஆனால் அதில் பல இன்னும் நிறைவேறவில்லை. எனவே மே 20ஆம் தேதி கங்கையை சுத்தம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கு மீண்டும் வாளாயிருந்தால் மே 21ஆம் தேதி முதல் வாரனாசியில் எதிர்ப்பு போராட்டம் தொடங்கும் என்று மேகசாசே விருது பெற்றவரும் நீர்மனிதன் என்று அழைக்கப்படுபவருமான ரஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் கங்கையை சுத்த செய்கிறோம் என்று வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வோட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்வதில்லை என்று இந்த ஆர்பாட்டக் குழு தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கன மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கங்கை நதியை நம்பியுள்ளனர். ஆனால் அது அழிந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட, படுத்த படுக்கை நிலையில் உள்ள தாய் போன்று தற்போது கங்கை நதி இருக்கிறாள், அதன் நோயைப் போக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்று கொதிப்படைகின்றனர், இந்த குழுவினர்.

அரசு இதற்கென்றே கங்கை நதி நீர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.ஆனால் கங்கையின் நிலை என்னவோ மேலும் மேலும் மோசமடைந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெறும் பதிவேடு அளவில் இருக்கும் அரசுத் துறையாகும், பெயருக்கு உள்ளது என்று இதன் மீது கடும் விமர்சனத்தை வைக்கின்றனர் இந்த இயக்கத்தினர்.

கங்கை நதியைப் பாதுகாக்க அதில் உள்ள பிரச்சனைகளை அறிய குழு ஒன்றை அமைக்கவேண்டும், கங்கை நதியை சாக்கடைகளிலிருந்து காப்பற்ற வேண்டும். கங்கை நதிக் கரைப் பகுதிகளை வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

ஆக்ரமிப்பு கூடாது, சுரங்கத் தொழில் கூடாது, மேலும் தற்போது நடைபெற்று வரும் அணைக்கட்டுத் திட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் போன்ற வலுவான கோரிக்கைகளுடன் போராட்டம், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளனர். கங்கை நதி இயக்கத்தினர்!

வெப்துனியாவைப் படிக்கவும்