இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வு: மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 83 பேர் தேர்வு

சனி, 6 மார்ச் 2010 (18:32 IST)
இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் முதன்மைப் பணிகளுக்கு நடந்த முதன்மைத் தேர்வில் (Preliminary Examinations) சைதை சா. துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சிப் பெற்ற 83 பேர் தேர்வாகியுள்ளனர்.

தமிழக மாணவர்களை இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி போன்ற உயர் பதவிகளுக்கு அதிக அளவில் தகுதி பெற வைக்கும் நோக்கோடு செயல்பட்டுவரும் சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவசப் பயிறிசி மையத்தின் மூலமாக இதுவரை 38 மாணவ, மாணவியர் கடந்த 3 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.

மனிதநேய அறக்கட்டளை பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயின்று இந்த ஆண்டு முதன்மைத் தேர்வெழுதிய 171 பேரில் 83 மாணவ, மாணவியர்கள் தேர்சிப் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இதன் பிறகு நடைபெறும். இதில் இ.ஆ.ப. மாதிரித் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்குச் சென்று அதிகபட்சமாக ஒரு மாத காலம் தங்குவதற்கும், உணவு, பயிற்சி வகுப்புகள் அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மனிதநேய அறக்கட்டளை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் வெளி மாணவ, மாணவியரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ள மனிதநேய அறக்கட்டளை, தக்க சான்றுகளுடன் மைய இயக்குனர் வாவூசியைச் சந்தித்து பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சா.துரைசாமி, நிருவாகிகள் மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மனித நேய அறக்கட்டளையை 044-24358373, செல்: 98401 06162 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்