இணையதளத்தில் கோளாறு: பி.எட். தேர்வு முடிவு தெரியாததால் மாணவர்கள் அவதி

வியாழன், 20 ஆகஸ்ட் 2009 (11:54 IST)
கல்வியியல் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பி.எட். தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் நேற்று அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 555 உள்ளது. இந்தக் கல்லூரிகளில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், இளநிலை கல்வியியல் (பி.எட்.) பருவத்தேர்வு கடந்த மே, ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர்.

இதன் முடிவுகள் tnteu.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனால் இணையதளக் கோளாறு காரணமாக தேர்வு முடிவை மாணவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதுபற்றி கல்வியியல் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இணையதள பிரச்னையால் தேர்வு முடிவை மாணவர்களால் உடனே பார்த்து அறிய முடியவில்லை. 555 கல்வியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை, விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைத்து விட்டோம். எனவே, மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம” என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்