பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.7இல் துவக்கம்

வெள்ளி, 31 ஜூலை 2009 (12:23 IST)
தமிழகம் முழுவதும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நடக்கும் இந்த கலந்தாய்வில் 59 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 61 ஆயிரம் இடங்கள் இருப்பதால், 2ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் உறுதியாக கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட கலந்தாய்வில் 23% மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்த விகிதம் 2ஆம் கட்ட கலந்தாய்வில் அதிகரிக்கும் என்பதால் இந்தாண்டு சுமார் 20 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது துவங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்ட போது, பிளஸ்-2 சிறப்புத் துணைத்தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடத்தப்படும்.

அதன் பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதலாமஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கும் என்றார்.

எனினும், சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி) மட்டும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு 10ஆம் தேதி வகுப்புகள் துவங்கும் என துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்