பேராசிரியர் பற்றாக்குறை: சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகவல்

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (11:57 IST)
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளதால், மாணவர்கள் பாடப் புத்தகத்துடன் நின்று விடாமல் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளையும் நன்றாகப் படிக்க வேண்டும் என சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.எல். படிப்பில் ஆயிரத்து 52 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு இரண்டாயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. கலந்தாய்வின் துவக்க விழாவில் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சச்சிதானந்தம் பேசுகையில், பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதம் உள்ளது. ஆனால் சட்டக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்றுதான் இருப்பார்கள்.

எனவே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வெறும் பாடப் புத்தகங்கள் மட்டும் அல்லாது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் போன்றவற்றையும் படிக்க வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்