சித்த மருத்துவ கல்லூரிகளில் மருந்தாளுநர், நர்சிங் தெரப்பி படிப்புகள் அறிமுகம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:39 IST)
சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் (பார்மசி), நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகள் இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகள் சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பிளஸ்2 தேர்வில் அறிவியல் பாடங்கள் படித்தவர்கள் இதில் சேரலாம். குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 35 சதவீத மதிப்பெண் போதும்.

மருந்தாளுநர் டிப்ளமோ படிப்பில் உடல் தத்துவம், பேச்சுத் திறமை, கணினி பயன்பாடு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருந்துகள் தயாரிக்கும் முறைகள் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும்.

இந்த படிப்பை முடித்தவர்களுக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

நர்சிங் தெரபி படிப்பில் உடல் தத்துவம், பேச்சுத் திறமை, கணினி பயன்பாடு, சித்தாவில் தொக்கணத்தில் உள்ள யுக்தி முறைகள், ஆயுர்வேதாவில் பஞ்சகர்மாவில் உள்ள யுக்தி முறைகள், யுனானியில் ரெஜிமன் தெரபியில் உள்ள யுக்தி முறைகள் மற்றும் யோகா மற்றும் இயற்கை முறையில் உள்ள தடவு முறைகள் பயிற்றுவிக்கப்படும். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் வேலை கிடைக்கும்.

மேற்கண்ட டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நேரிலும், தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் எ‌‌ன்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்