கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து அளிப்பது ஏன்: உச்ச நீதிமன்றம் கேள்வி

சனி, 1 ஆகஸ்ட் 2009 (14:09 IST)
கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து அளிப்பதற்கான தேவை உள்ளதா என்பதை பேராசிரியர் டி.என்.டாண்டன் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபகாலமாக காளான்களைப் போல் நாடு முழுவதும் பெருகி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2006இல் வழக்கறிஞர் விப்லவ் சர்மா தொடர்ந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழக்கை விசாரித்தது.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் பேசுகையில், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் அளிக்கப்படும் உயர் கல்வி, ஆய்வுகளின் தரம் நிகர்நிலை அந்தஸ்து அளவுக்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய டாண்டன் கமிட்டியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதற்கு, நிகர்நிலை பல்கலைக்கழகம், பலகலைக்கழகம் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு அவசியமா? கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலை அந்தஸ்து அளிப்பது ஒழிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களா? பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்க முடியாதா? என நீதிபதி தல்வீர் பண்டாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தேவைக்கான காரணம் என்ன? நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்து என்ற தகுதியை நீக்கிவிடலாமா என்பது குறித்து டாண்டன் கமிட்டி ஆராயுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு பற்றிய அனைத்து அம்சங்களையும் டாண்டன் கமிட்டி ஆய்வு செய்து வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று கோபால் சுப்ரமணியம் பதிலளித்தார்.

இதையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் எத்தனை கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, எத்தனைப் நிறுவனங்களுக்கு இந்த அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதி வரை தள்ளி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்