கொள்ளை கோஷ்டியின் ஆட்சியா? காவி ஆட்சியின் சதியா?

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (16:46 IST)
''மன்னர் இறந்துவிட்டார். மன்னர் நீடூழி வாழ்க'' என்று சொன்னார்கள் என்றால், ராஜ்ஜியத்தின் அதிகாரத்தையும் மன்னரின் சொத்துகளையும் கைப்பற்றப் போகிறார்கள் என்று அர்த்தம்.
 

 
அது மன்னர் ஆட்சியில் சரிதான், வேறு வழியில்லை, இந்த கொள்ளையனுக்குப் பதில் மற்றொரு கொள்ளையன் என்று விட்டுவிடலாம்.
 
ஆனால், இது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் நாடு என்று சொல்கிறார்கள். அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டியவர் உடல் நலம் பற்றி சொல்ல மறுக்கிறார்கள். இருந்தபோதும், கவர்னருக்கு அவர் வாய்மொழியாக அறிவுரை சொல்கிறார். ஆனால், நேரடியாகச் சொல்லவில்லை என்பதை கவர்னர் அறிக்கையே காட்டுகிறது.
 
Medically alive என்ற வார்த்தைகளுக்கும், சுய அறிவுடன் செயல்படுகிறார் என்ற வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு. அதனை அப்பல்லோ என்ற தனியார் நிறுவனம் சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் படியான அதிகாரமே சொல்ல முடியும்.
 
இப்போது கைநாட்டு இடுகிறார். சாட்சியத்திற்கு அரசு அதிகாரிகள் கையொப்பம் இடுகின்றனர். அவரின் உடல் ஆரோக்கியம் பற்றி அரசு அறிவிக்காது. ஆனால், அப்பல்லோ அறிவிக்கும் நிலையில், நம்ப வைப்பதற்காக அரசு மருத்துவ அதிகாரி தேவைப்படுவது சிரிப்பை வரவழைக்கும் உண்மை. நம்புவதற்கில்லை.
 

 
தனிநபர் முக்கியமானவர், அவர் அந்தரங்கம் முக்கியமானது என்ற கூற்றுக்குப் பின்னே தமிழ்நாட்டின் கொள்ளை கோஷ்டியும் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் செயல்படுகின்றன என்று தோன்றுகிறது. நான் தவறாகச் சொல்கிறேன் என்றால், வதந்தி பரப்புகிறேன் என்று குற்றம் சாட்ட வேண்டுமென்றால், முதலமைச்சர் உடல்நலம் பற்றி மாநில ஆளுநர் அறிக்கை அளிக்க வேண்டும்.
 
அவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க வேண்டும். பிரிட்டன் மருத்துவர் உள்ளிட்டவர்கள் என்ன முறையில் தங்களை கிருமி சுத்தம் செய்து கொண்டார்களோ அப்படி செய்துகொண்டு முதலமைச்சரை ஆளுநர் நேரில் பார்த்து உண்மையை வெளியிட வேண்டும். ஏனெனில் மக்கள்தான் தீர்மானிப்பவர்கள்.
 
இது மக்களாட்சி என்று நீங்கள் சொல்கின்றீர்கள். அப்படிச் செய்வது மட்டும்தான் அரசியல் சட்டத்துக்கு உண்மையானவராக ஆளுநர் இருக்கிறார் என்பதைக் காட்டும் வழி. இல்லையெனில் காவி அதிகாரத்தின் அல்லது முதலமைச்சரை தம் கை பிடியில் வைத்திருக்கும் கும்பலின் கையில் ஆளுநர் இருக்கிறார் என்று பொருளாகும்.
 
தனிநபர் அதிகாரத்தில் இயங்கும் அதிமுக கட்சியின் சொத்தாக தமிழகம் இயங்க வாய்ப்பில்லை. ஏனெனில், சட்டத்தின் ஆட்சி நடக்கிறது, மன்னராட்சி அல்ல என்று நீங்கள்தான் எமக்குச் சொன்னீர்கள்.
 
(அப்பல்லோவில் இருக்கும் அந்த தனிநபரின் துன்பத்தை நான் உணர்கிறேன். வலிக்கிறது. ஆனாலும், தனிநபரை விட அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தின் ஜனநாயகமே உயர்ந்தது.)
 
கட்டுரையாளர்: மதிவாணன், [CPI ML மாவட்ட செயலாளர், மதுரை.]
அடுத்த கட்டுரையில்