உலகக் கோப்பை ஆட்டத்தில் தோனி மிகவும் மோசமாக ஆடினார் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான அணியில் தோனி இடம்பெற வாய்ப்பில்லை என கூறிவந்தனர். இதனால் தோனி தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என நிர்பந்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கௌதம் கம்பீர் நேற்று நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ரிஷப் பந்த், அஞ்சு சாம்சன் போன்ற இளம்வீரர்களுக்கு வழிவிட்டு தோனி தனது ஓய்வு குறித்து ஒரு சரியான முடிவை எடுக்க இதுவே சரியான தருணம் எனவும், இந்த விஷயத்தில் தோனி உணர்ச்சி வசத்திற்கு இடமளிக்ககூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தோனி தான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார் எனவும், ஒரு அணி தோல்வி பெரும்போது முழு பழியையும் அவர் மீது போட்டுவிடக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனியின் நெறுங்கிய நண்பரான அருண் பாண்டே, தோனி உடனடியாக ஓய்வு பெற வாய்ப்பில்லை எனவும், ஓய்வு குறித்து தோனிக்கு தற்போது முடிவெடுப்பதற்கான எந்த எண்ணமும் இல்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.