நேற்று கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 226 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாதனை புரிந்தது. கிங்ஸ் லெவனின் 223 என்ற இமாலய இலக்கை 4 விக்கெட்டுகள் 3 பந்துகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன் சேஸிங் செய்யப்பட்ட ஆட்டமாக இது மாறியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தின்போது ஆரம்பத்தில் சுமாரான பேட்டிங் செய்த தெவாட்டியா, சாம்சன் அவுட் ஆகி போனதும் பவர் மோடுக்கு மாறி விட்டார். ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை தெவாட்டியா பறக்கவிட்டு ரசிகர்களை வாயை பிளக்க வைத்தார். அந்த ஓவரில் ஒரு பால் தவிர்த்து மீது ஐந்து பால்களையும் சிக்ஸர் அடித்தார். இதுவரை உலக டி20 ஆட்டத்தில் யுவராஜ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அந்த ஒரு பாலை தவறவிடாமல் இருந்திருந்தால் தெவாட்டியா புதிய சாதனை படைத்திருப்பார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் “மிஸ்டர் ராகுல் தெவாட்டியா ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி. மிகப்பெரும் சேஸிங் செய்து வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். மயங்க், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினீர்கள்” என தெரிவித்துள்ளார்.