கனவெல்லாம் பலித்ததே.. மகனுக்காக நிலத்தை விற்ற சூர்யவன்ஷியின் தந்தை…!

vinoth

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (12:53 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பும் பேராசையோடு நேற்று வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அவரின் இந்த இன்னிங்ஸ் பல முன்னாள் ஜாம்பவான்களையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.

அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். மேலும் குறைந்த பந்துகளில் ஐபிஎல் சதமடித்த இந்திய வீரர் என்ற யூசுப் பதானின் (38 பந்துகளில்) சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யவன்ஷி பற்றி பல நெகிழ்ச்சியான தகவல்கள் பரவி வருகின்றன. சூர்யவன்ஷி கிரிக்கெட்டில் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக 10 வயது முதலே அவருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை எல்லாம் வழங்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய விவசாய நிலத்தை எல்லாம் விற்றாராம். அப்படி உருவாக்கிய தன் மகன் இன்று உலகக் கிரிக்கெட்டையேத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளான் என்ற பூரிப்பில் இப்போது இருப்பார் அவர் தந்தை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்